”உள்ளாட்சித்துறை ஊழல் துறையாக மாறிவிட்டது. அதிலுள்ள அரசு அதிகாரிகள் அனைவரும் ஊழலுக்கு துணை போயிருக்கிறார்கள். எம்-சாண்ட் மணல் வாங்கியதில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும்” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி முரசொலியில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பிப்ரவரி 24ஆம் தேதியான இன்று, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜாராக முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டாலின் நேரில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்று மு.க. ஸ்டாலின் ஆஜராக உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்' - ஓபிஎஸ், ஈபிஎஸ் திட்டம்