சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், கடந்த 2019ம் ஆண்டு இந்து கோயில்களின் அமைப்புகள் குறித்து, ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். இது இந்து கோயில்களுக்கு எதிராக உள்ளதாக சர்சை எழுந்தது.
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடிகை காயத்ரி ரகுராம், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், இந்துக்கள் அனைவரும் திருமாவளவனுக்கு புடவை அனுப்புங்கள், திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேர் என்னிடம் இந்துகள் குறித்து பேச சொல்லுங்கள் என்று தனக்கே உரிய பாணியில் கருத்துக்களை தெரிவித்தார்.
காயத்ரி ரகுராமின் கருத்துகள் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து காயத்திரி ரகுராமிற்கு எதிராக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டங்களை நடத்தினர்.
இதனிடையில், விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் அவதூறு கருத்துகளை ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.
இது அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே நடிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்ற நடுவர் கவுதமன் முன்பு இன்று(ஜூன்.11) விசாரணைக்கு வந்தது.
இம்மனுவை விசாரித்த காயத்ரி ராகுராம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி, வழக்கை ஜூலை 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.