சென்னை: தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினராகப் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டதற்குப் பாடலாசிரியர் பழனிபாரதி தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவராகத் திண்டுக்கல்லைச் சேர்ந்த பட்டிமன்ற நடுவர் ஐ. லியோனியை சில தினங்களுக்கு முன்பு நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இச்சூழலில், தற்போது தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக்குழு உறுப்பினராகப் பேராசிரியர் சுப. வீரபாண்டியனை நியமித்து மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
பழனிபாரதி வாழ்த்து
இதற்குப் பாராட்டு தெரிவித்து பாடலாசிரியர் பழனிபாரதி தனது முகநூல் பக்கத்தில், "செய்பவனின் திறமையை ஆராய்ந்து, செய்ய வேண்டிய செயலையும் ஆராய்ந்து, தக்க காலம் பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்" என்கிறான் அய்யன் வள்ளுவன்.
அதற்கேற்றாற்போல் தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினராகப் பேராசிரியர் சுப.வீரபாண்டியனை நியமித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அண்ணன் சுப வீக்கு அன்பு வாழ்த்துகள்" என்று அதில் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.