சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதிய தியாகராஜன், தென்னரசு, விஜய் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், ” கடந்த ஜனவரி மாதம் நடந்த காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்வு அறை கண்காணிப்பாளர் பணிக்கு காவல் துறையைச் சேர்ந்தவர்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், காவல் துறையினர் பல இடங்களில் முறைகேடுகளுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
தேர்வுப்பணி கண்காணிப்பாளராக செல்பவர்களின் தகவல்கள் முன்கூட்டியே வெளியாகின்றன. தேர்வு எழுதும் மாணவர்களின் விவரமும் முன்னதாகவே வெளியாவது எப்படி எனத் தெரியவில்லை. குறிப்பிட்ட தேர்வு மையத்தில் படிப்பவர்கள் அடுத்தடுத்து தங்களின் தேர்வுகள் வரும் வகையில், ஒரே நேரத்தில் முறைகேடாகப் பதிவு செய்கின்றனர்.
காவல்துறை தேர்வுக்கான பயிற்சி மையம் நடத்துவோர் மூலமும் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். ஆனால், அவசர அவசரமாக பணி நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இனிமேல் நடைபெறும் காவலர் தேர்வில், பழைய முறைப்படி உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்ட பின்னரே எழுத்துத்தேர்வு நடத்த வேண்டும் ” எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: மகனை கொன்றுவிட்டதாக தாய் புகார்; காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு