பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் பெறப்பட்டது. இந்தாண்டு 494 பொறியியல் கல்லூரியில் உள்ள 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்களுக்கு, ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 3ஆம் தேதி வெளியிட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையில் 45 மையங்களில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில், 1 லட்சத்து ஆயிரத்து 672 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். பின்னர் அவர்களின் சான்றிதழ்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் 479 கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 598 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் இருந்து 29,342 இடங்களுக்கும் என 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்களும் உள்ளன.
பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் 4 சுற்றுகளாக நடந்து வருகிறது. இதில் முதல்சுற்று கலந்தாய்விற்காக அழைக்கப்பட்ட 9,872 மாணவர்களில் 6740 மாணவர்கள் பி.இ., பி.டெக்.படிப்பில் இடங்களை தேர்வு செய்துள்ளனர். மீதமுள்ள 3,132 மாணவர்கள் எந்த இடங்களையும் தேர்வு செய்யாமல் விலகி உள்ளனர்.
இரண்டாம் சுற்று ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்ற 21,053 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் பணம் செலுத்திய பின்னர், விரும்பும் கல்லூரியை பதிவு செய்த மாணவர்களுக்கான தற்காலிகமாக ஒதுக்கீடு இன்று மாலையில் அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மாணவர்கள் தங்களின் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னர் 18ஆம் தேதி இறுதி ஒதுக்கீடு அளிக்கப்படும்.
கலந்தாய்வில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் காலியாக உள்ள இடங்களின் விபரம், கலந்தாய்வில் நிரப்பப்பட வேண்டிய இடங்கள் குறித்த விபரங்கள் எளிதில் தெரிந்துக் கொள்ளும் வகையில் வெளியிடப்படவில்லை. இதனால் மாணவர்களும், பெற்றோரும் தங்களுக்கான கல்லூரி மற்றும் காலியிடங்களை கண்டுப்பிடிக்க சிரமமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.