தமிழ்நாடு அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனப் பாமக சார்பில் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில் 20% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி இன்று (டிச. 01) சென்னை பிராட்வே பகுதியில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர். இப்போராட்டத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
பாமக தலைமை அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாமக தொண்டர்கள் பேருந்து, வேன், கார் மூலம் சென்னை நோக்கி வந்தனர். கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த காவல் துறையினர் தடைவிதித்துள்ளனர்.
லாரி, வேன், கார்களில் வரும் பாமக தொண்டர்களைக் காவல் துறையினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியும் கைதுசெய்தும் வருகின்றனர். இதனால் பாமகவினருக்கும் காவல் துறையினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் பெருங்களத்தூரில் ரயிலின் மீது கல்லெறிந்து மறியலிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் சென்னை அண்ணா சாலை, ரிச்சி தெரு, காமராஜர் சாலை போன்ற பகுதிகளில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்த வந்த பாமகவினரை இப்பகுதிகளில் வைத்து காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். அதுமட்டுமின்றி சென்னை முழுவதும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.