வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் இஸ்கெமிக் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 35 வயதான நோயாளிக்கு மூன்று சிக்கலான சிகிச்சை முறைகளை வெற்றிகரமாகச் செய்து காப்பாற்றியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராம்குமார், திடீரென இடது கை, கால்கள் செயல் இழந்த நிலையில், முக முடக்குவாத அறிகுறிகளுடன் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் பக்கவாதத்துக்கான அனைத்து அறிகுறிகளுடனும் இருந்தார்.
வானகரம் அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பிரபாஷ் நோயாளிக்கு பக்கவாதத்தின் அறிகுறி 18 என்ற அளவில் இருந்ததைக் கண்டறிந்தார். அவருக்கு அவசர எம்.ஆர்.ஐ (டி.டபிள்யூ.ஐ) ஸ்கேனிங் செய்ததில் வலது மத்திய பெருமூளை தமனி பகுதியில் ஒரு பெரிய திசு சிதைவு இருந்தது.
அதனைத் தொடர்ந்து மருத்துவர்களால் நோயாளிக்கு த்ரோம்போலிசிஸ் மேற்கொள்ளப்பட்டு, அதைத் தொடர்ந்து மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி செய்யப்பட்டு உறைவு அகற்றப்பட்டு ரத்த நாளம் மறுசீரமைக்கப்பட்டது. அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையால் நோயாளி படிப்படியாக குணம் அடையத் தொடங்கி, பின்னர் வீடு திரும்பினார். அவர் இப்போது நரம்பியல் மறுவாழ்வு சிகிச்சை முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும் பிறருடன் நன்கு தொடர்புகொள்கிறார். குறைந்தபட்ச ஆதரவோடு அவரால் நடக்க முடிகிறது.
இதுகுறித்து டாக்டர் சித்தார்த்த கோஷ் கூறும்போது, சமூகத்தில் விழிப்புணர்வு, சரியான நேரத்தில் நோய் கண்டறிதல், தீவிர மேலாண்மை, (த்ரோம்பாலிஸிஸ், த்ரோம்பக்டமி, சரியான நேரத்தில் செய்யப்படும் டிகம்ப்ரசிவ் க்ரானியக்டமி, ஏர்வே மேலாண்மை உட்பட) பக்கவாதத்துக்கு பிந்தைய சிறந்த மறுவாழ்வு பராமரிப்பு நடைமுறை ஆகியவை பக்க வாத சிகிச்சை முறையில் நல்ல பலன்களை வழங்க கூடிய மிக முக்கிய அம்சங்கள் என்றார்.
அப்போலோ போஸ்ட்-அக்யூட் கேர் ஒருங்கிணைந்த பக்கவாத வாழ்வு மையம், பக்கவாத சிகிச்சை உதவிக் குழு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்த ‘பக்கவாத ஹீரோ’ ராம்குமாரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 'ஆக்ஸ்போர்ட் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது, பக்கவிளைவுகள் அற்றது' - சீரம்