சென்னை: சிறையில் ஆயுள் கைதிகளாக உள்ள இஸ்லாமியர்கள் விடுதலை, 6 தமிழர்கள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடந்த பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் சிறையில் ஆயுள் கைதிகளாக உள்ள இஸ்லாமியர்கள், 6 தமிழர்கள் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரிலிருந்து சட்டமன்றத்தை நோக்கி இன்று (செப்.8) பேரணி நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நெல்லை முபாரக், 'திமுக தேர்தலின்போது, சிறையில் ஆயுள் கைதிகளாக இருக்கும் இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர். ஆனால், தற்பொழுது அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
தமிழக அரசால் மட்டுமே இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய முடியும். ஆனால், எந்த அழுத்தத்தின் காரணமாக தமிழக அரசு மௌனமாக இருக்கிறது. வரும் செப்.15 ஆம் தேதிக்குள் ஆயுள் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்றால் அமைச்சர்களை சிறைப்பிடிக்கும் போராட்டத்தை நடத்துவோம்' எனக் கூறினார்.
இதையும் படிங்க: ‘பிபிஜிடி சங்கரை விடுதலை செய்யாவிடில் போராட்டம் நடத்தப்படும்’ - தடா. பெரியசாமி