சென்னை: கும்பகோணம், தண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் கடந்த 1971ஆம் ஆண்டு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பார்வதி சிலை, சம்பந்தர் சிலை, கிருஷ்ண கலிங்க நர்த்தனம் சிலை, அகஸ்தியர் சிலை, அய்யனார் சிலை ஆகிய 5 உலோக சிலைகள் திருடப்பட்டதாக கடந்த 2019 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கே.வாசு என்பவர் புகார் அளித்தார்.
மேலும் கடந்த 52 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இந்த சிலைகள் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், உடனடியாக கண்டுபிடிக்கக்கோரி அவர் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியங்கள் மற்றும் ஏல மையங்களில் தேடி வந்தனர்.
மேலும், திருடுபோன சிலைகளின் புகைப்படங்கள் ஏல மையங்களின் வலைதளத்தில் உள்ள சிலைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.
விசாரணையில் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல மையத்தின் வலைதளத்தில் நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் திருடுபோன சம்பந்தர் சிலையின் புகைப்படம் இருப்பதை கண்டுபிடித்த சிலைகடத்தல் தடுப்புப் பிரிவினர், தங்களிடம் உள்ள சிலையின் புகைப்படத்துடன் அதை ஒப்பிட்டு பார்த்தபோது அது நடனபுரீஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட 34.3 செ.மீ உயரம் கொண்ட சம்மந்தர் சிலை என்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.
மேலும் மாநில தொல்லியல் துறையின் நிபுணர்களும் அதை உறுதி செய்த நிலையில், சிலை வைக்கப்பட்டுள்ள கிறிஸ்டீஸ் ஏல மையத்திற்கு தகவல் தெரிவித்தும், இந்திய அமெரிக்க அரசுகளுக்கு இடையேயுள்ள குற்ற விஷயங்களில் பரஸ்பர உதவி புரிதல் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிலையை மீட்டுக்கொடுக்கும்படியும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே இதே கோவிலில் திருடப்பட்ட 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பார்வதி சிலையும் அமெரிக்காவில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல மையத்தில் இருப்பதை கண்டுபிடித்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதை இந்தியாவிற்கு மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பந்தர் சிலையையும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து அமெரிக்காவில் உள்ள ஏல மையத்தில் இருந்து மீட்கும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பார்வதி சிலையுடன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்மந்தர் சிலையும் கூடிய விரைவில் தாண்டந்தோட்டத்தில் உள்ள நடனபுரீஸ்வரன் சிவன் கோவிலில் வைக்கப்படும் எனவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் 7 பஞ்சலோக சிலைகள் பறிமுதல்!