சென்னை: திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்பி, நேற்று (நவம்பர் 15) தூத்துக்குடியிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரைச் சந்தித்த, தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள், நடன நையாண்டி மேளம் சங்கத்தினர், சென்னை சங்கமம் (Chennai Sangamam Program) என்ற தலைப்பில் திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடத்தியதுபோல் மீண்டும் நடத்தக்கோரி அவரிடம் மனு அளித்தனர்.
அவர்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட கனிமொழி, இதனை முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய நாட்டுப்புறக் கலைஞர்கள், ”கடந்த திமுக ஆட்சியின்போது, ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் தொடங்கி ஆறு நாள்கள் வரை சென்னை சங்கமம் நிகழ்ச்சி (Chennai Sangamam Program) நடத்திவந்தோம். இதனால் எங்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்துவந்தது.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில், சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சில நாட்டுப்புறக் கலைஞர்கள் வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டனர்.
தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மனத்தில்கொண்டு மீண்டும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை (Chennai Sangamam Program) நடத்தி கலையையும், கலைஞர்களையும் பாதுகாத்து உதவிட வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பிர்சா முண்டா தொடங்கிய போர் இன்றும் தொடர்கிறது- கே.எஸ். ராதாகிருஷ்ணன்