சென்னை: சுழற்சங்கம் சார்பில் நடைபெற்ற 1000 மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்துகொண்ட பொன்முடி, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றினை நட்டு தொடங்கிவைத்தார். பின்னர், கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
அப்போது மாணவர்கள் முன்னிலையில் பேசிய பொன்முடி, “மாணவர்கள் படிப்போடு நிறுத்திவிடாமல் விளையாட்டு, சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும். இங்கு 5000 மாணவர்கள் படிக்கிறீர்கள்.
ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் இது அழகிய வனமாகும் இதைச் செய்வீர்களா?” என மறைந்த முதலமைச்சர் 'ஜெயலலிதா பாணி'யில் மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார். மாணவர்களும் செய்வோம் என பதில் அளித்தார்கள்.
மேலும், நீங்கள் நட்ட மரத்திற்கு உங்கள் பெயர்ப் பலகையை வைத்துக்கொள்ளுங்கள் எனவும் பொன்முடி கூறினார்.
”தமிழ்நாடு அரசு தமிழ் பயின்றவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்துள்ளது, மாணவர்கள் அனைவரும் தமிழ்மொழியைப் படிப்பதில் மிகுந்த ஆர்வத்தைச் செலுத்திட வேண்டும்.
நாம் இரு மொழிக்கொள்கை கொண்டவர்கள். உலகளாவிய மொழி ஆங்கிலம், நம் மொழி தமிழ். ஆகையால் தமிழ் மொழி கற்று வேலைவாய்ப்பிலும் முன்னுரிமைப்பெற வேண்டும்” எனவும் பொன்முடி தெரிவித்தார்.
தொடர்ச்சியாகச் செய்தியாளரைச் சந்தித்த அவர், ”மரக்கன்றுகளை நடுவது மட்டும் பணி அல்ல. அவற்றைப் பேணிப் பாதுகாத்து இந்தக் கல்லூரியைத் தோட்டத்துக்குள் இருப்பதுபோல மாற்ற வேண்டும். சமூகப் பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.
மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய பிரச்சினை தொடர்பாக ஆலோசித்துவருகிறோம். இது தொடர்பாக முதலமைச்சரிடத்திலும் ஆலோசனை செய்துள்ளோம், விரைவில் அப்பணிகள் நடைபெறும்” என்றார்.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜியின் முன்பிணை மனு தள்ளுபடி