கரோனா பரவலைத் தடுக்க மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. தற்போது, ஜூன் 1ஆம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதை எதிர்த்து, வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 'தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று அதிகமாகி வருவதாகவும், 200 குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு படிக்க வரும் பெரும்பாலான மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த, எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக' சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், 'தேர்வுக்கு வரும்போது மாணவர்கள் தனி மனித இடைவெளியை பின்பற்றுவார்களா? என்பது கேள்விக்குறி எனவும், எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாட்டையும் செய்யாமல் தேர்வை அறிவித்திருப்பது மாணவர்களுக்கு கரோனா பரவும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிபிஎஸ்சி தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்வரை, 10ஆம் வகுப்புத் தேர்வை நடத்தக் கூடாது. எனவே, தேர்வை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாணவர்கள் தேர்வுக்கு முகக்கவசம் அணிந்து வர வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன்