சௌகார்பேட்டையை சேர்ந்த நந்த்கிஷோர் சந்தக் என்பவரின் வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரது கடையை திறக்கச் சொல்லியும், பணம் கேட்டும் கடந்த 2017 ஜூலை 22ம் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர் ஏழுகிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், அவரது உறவினரான கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ் சியாம், சந்தக் உள்ளிட்ட 6 பேர் மீது மிரட்டல் விடுத்த பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், இந்த வழக்கில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கொலை, கூட்டுச்சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், இந்த வழக்கு, சாட்சிகள் விசாரணைக்காக சென்னை 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கொலை சம்பவமே நடக்காதபோது, உள்நோக்கத்துடன் வழக்கு விசாரணை நடைபெறுவதால் விசாரணைக்கு தடை விதிக்கவும், அந்த வழக்கை ரத்து செய்யவும் கோரி ராஜேஷ் சியாம் சந்த் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ராஜேஷ் சியாம் சந்தக்கிற்கு எதிராக சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து ஏழுகிணறு காவல் ஆய்வாளர் மற்றும் புகார்தாரர் நந்த்கிஷோர் சந்தக் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்புட்னி வி’ தடுப்பூசி: ஆண்டுக்கு 85 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யவுள்ள இந்தியா!