சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே மருந்து தயாரிக்கும் நிறுவனமான "சன் பார்மா" இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கூடுதலாக மருந்து உற்பத்தி செய்வதற்கான விரிவாக்க பணிக்காக சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரிவாக்க பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு 3.7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சரணாலயம் சுற்றி உள்ள 5 கி.மீ பரப்பளவும் சரணாலயமாக கருத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு 1998ஆம் ஆண்டு அறிவித்துள்ளது. மேலும் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் ஏதேனும் கட்டமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றால் தேசிய வன உயிர் வாரியத்தின் அனுமதி அவசியம் என விதிகள் உள்ள நிலையில், சன் பார்மா நிறுவனம் இதுவரை வன உயிர் வாரியத்தின் அனுமதி பெறவில்லை எனவும், பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் விரிவாக்க பணிக்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேசிய தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தியாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதித்துறை உறுப்பினர் புஸ்பா சத்யநாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபல் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,வனத்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் சன் பார்மா நிறுவனம் உள்ளிட்டவை சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து, நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதிக்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும், அதுவரை தற்போது உள்ள நிலையிலேயே விரிவாக்க பணி நிறுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.