தஞ்சை: கும்பகோணம் அருகே சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவர் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கும்பகோணத்தில் உள்ள சிவகுருநாதன் சுவாமி கோயிலில் இருந்த சோமாஸ்கந்தர் மற்றும் தனி அம்மன் சிலைகள் திருடப்பட்டு, பழைமை வாய்ந்த சிலைகளுக்கு மாறாக, போலியான சிலைகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இருந்தார்.எனவே அந்த சிலைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து, பாண்டிச்சேரியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று (ஜூன்15) காணாமல் போனதாகக் கூறப்பட்ட சிலைகளின் பழைய புகைப்படத்தை பெற்று, தற்போதுள்ள சிலைகளின் புகைப்படத்துடன் ஒப்பிட்டபோது, அது போலியான சிலைகள் என்பது தெரியவந்தது. எனவே, இதன்மூலம் பழமையான சோமாஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகள் கோயில் ஊழியர்களுடன் இணைந்து கடத்தப்பட்டிருப்பதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகித்தனர்.
இதனையடுத்து திருடப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் அம்மன் சிலைகளின் பழைமையான புகைப்படங்களை வைத்து பல அருங்காட்சிய இணையதளங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி உள்ளனர். அப்போது சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள நார்டன் சைமன் மியூசியத்தில் இருப்பதும், அம்மன் சிலை அமெரிக்காவின் டென்வர் மியூசியத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு இரு சிலைகளும் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள இரு சிலைகளை மீட்கும் பணியில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, அமெரிக்காவிலிருந்த 10 சிலைகளை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட சாயாவனம் ரத்தின சாயாவனேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர் சிலைக்கு சிறப்பு பூஜை