சென்னை: ஈஞ்சம்பாக்கம் பகுதியில், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 27 நீர்நிலைகளைக் கண்டுபிடித்துப் பாதுகாக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னையைச் சுற்றி இருந்த பல நீர்நிலைகள் காணாமல் போயுள்ளன. நீர்நிலைகள் வாழ்வாதாரத்துக்கு நுரையீரலைப் போல முக்கியமானது என்பதை உணர்ந்து மாநகராட்சியின் அனைத்து அலுவலர்களும், அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கப் பணி - அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
மேலும், சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதுமுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டியது மாநில அரசு, மாநகராட்சி அலுவலர்களின் கடமை எனத் தெளிவுப்படுத்தினர்.
அதேபோல அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள், அரசு நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில் அரசியல் தலையீடுகளுக்கு எக்காரணங்கள் கொண்டும் இடமளித்து விடக்கூடாது எனவும் தெரிவித்தனர்.
காணாமல் போன நீர்நிலைகளை சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரலாம் என மனுதாரருக்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, இந்த உத்தரவை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.