நம் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தி கொண்ட உணவு முறை மாற்றம், பழக்கவழக்க மாற்றம் ஆகியவற்றால் பல்வேறு நோய்களை இன்றைய மனிதர்கள் சந்தித்து வருகின்றனர். குடல் புண், வயிற்றுப் புண், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கும் நீர்கட்டிப் பிரச்னை போன்ற பல்வேறு நோய்கள் தற்போது பரவி காணப்படுகிறது.
இந்நிலையில் மனித உடலில் குடலில் ஏற்படும் அலர்ஜி, புண்கள் பல நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்தி உயிரையும் உடல் நலத்தையும், எப்போதும் சுறுசுறுப்பாக வைக்கும் அருமருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழைய சோறு இருப்பதாக ஸடான்லி மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீராகரமும் பழைய சோறும்
பழைய சோறு, பழைய சோற்றுத் தண்ணீர், நீராகாரம், நீச்சத்தண்ணி என பல பெயர்களால் பழங்காலம் தொட்டு நமது பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றாகத் திழந்து வரும் பழைய சோறு, இன்றைய நவீன காலத்தில் துரித உணவுகளால் ஓரம் கட்டப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்களின் இந்தக் கூற்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அருமருந்தான பழைய சோறு பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து கடந்த மார்ச் மாதம் முதல் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள இரப்பை மற்றும் குடல் சார்ந்த துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான இரைப்பை மற்றும் குடல் துறை பேராசிரியர் டாக்டர் ஜஷ்வந்த் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
மக்களால் கிடைத்த யோசனை
தற்போது உடலில் வாயு, மலச்சிக்கல், அடிக்கடி மலம் செல்வது, ரத்தபோக்கு, புற்றுநோய் போன்ற நோய்களின் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத அளவுக்கு இந்த நோய் தற்போது பெரிய அளவில் உருவெடுத்துள்ளது. இதில் பெருங்குடல் அலர்ஜி, சிறுகுடல் அலர்ஜி, வாய்ப்புண், குடல்புண் என தினமும் 100க்கும் அதிகமாக நோயாளிகள் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருகின்றனர்.
அவ்வாறு வரும் நோயாளிகளிடம் ஏன் இந்த நோய்கள் வருகின்றன? உங்களுடைய பழக்க வழக்கத்தில் என்ன மாற்றம் செய்தீர்கள் எனக்கேட்ட போது, ”நாங்கள் பழைய கால உணவு முறையான பழைய சோறு சாப்பிட்டு வந்தோம். ஆனால் தற்போது அவற்றை சாப்பிடுவதில்லை” எனக் கூறினர். மக்களிடம் நடத்திய ஆய்வில் கிடைத்த யோசனை சிகிச்சை முறையை பின்னர் குடல் புண், அலர்ஜி, வாய்ப்புண்ணுடன் வந்த நோயாளிகளுக்கு பழைய சோறு சாப்பிட சிபாரிசு செய்தோம்.
பழைய சோறு குறித்த ஆராய்ச்சி
அதில் பழைய சோறு சாப்பிட்டவர்களின் நோய் பாதிப்பு வெகுவாகக் குறைந்தது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக மருந்துகள் எடுத்தும் அறுவை சிகிச்சை செய்தும் சரிசெய்ய முடியாத குடல் நோய் பிரச்னைகள், பழைய சோறு சாப்பிடத் தொடங்கியவுடன் சரியாகத் தொடங்கியுள்ளன.
பண்டைய கால உணவு முறை நோய் தீர்க்கும் மருந்தாக இருந்தாலும் அதனை விஞ்ஞான ரீதியாக நிருபிக்க கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு, கடந்த மார்ச் மாதம் இந்த பழைய சோறு ஆராய்ச்சிக்காக அரசிடம் இரண்டு கோடியே ஏழு லட்சம் நிதியுதவி பெற்றுத் தொடங்கினோம்.
குடலை பராமரிக்கும் வைட்டமின்கள்
மனித உடலில் சாதாரணமாக 80 விழுக்காடு விஷம், குடல் வழியாகவே செல்கிறது. இதில் நல்ல பாக்டீரியா இருந்தால் விஷம் சத்துப்பொருளாக மாறி உடலுக்கு வலு சேர்க்கிறது. அதுவே கெட்ட பாக்டீரியாவாக இருந்தால் அது குடலில் அலர்ஜியை ஏற்படுத்தி உடலில் பல விதமான நோய்கள் வர வழிவகை செய்கிறது.
இதையும் படிங்க: டிப்ஸ்.. பச்சிளம் குழந்தை, தாய்மார்களின் தோல் பராமரிப்பு!
இந்நிலையில், பழைய சோற்றில் உள்ள விட்டமின் கே, விட்டமின் பி12 ஆகியவை குடலை பாதுகாப்பதுடன், ஜீரணத்தையும் அதிகப்படுத்தி உடலுக்கு பெரும் சக்திகளை தருகிறது. தற்போது உண்ணும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அடிக்கடி பயன்படுத்தப்படும் ஆன்டிபயாடிக் போன்றவை உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அழித்து விடுகின்றன. இவ்வாறு அழிக்கப்படும் பாக்டீரியா, மனித உடலில் மீண்டும் உருவாக ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஆகும். மேலும் உணவு முறையைப் பொருத்து இந்தக் கால அவகாசம் சில ஆண்டுகளைத் தாண்டியும் செல்லும்.
100 விழுக்காடு பலன்
மனித உடலில் குடலுக்கு பாக்டீரியா கட்டாயத் தேவையாக உள்ளது. இந்தப் பழைய சோற்றில் குடலை வலுப்படுத்தும் நல்ல பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. குறிப்பாக இயற்கை முறையில் பயிரிடப்பட்ட புழுங்கல் அரசி பழைய சாதம், கைக்குத்தல் அரசி பழைய சாதம் போன்றவற்றில் சாதாரண அரிசி பழைய சாதத்தில் கிடைப்பதை விட பன்மடங்கு பயன் மனித உடலுக்கு கிடைக்கிறது.
பழைய சோறு சாப்பிடும் வாயு, அடிக்கடி மலம் செல்லுதல், மலச்சிக்கல், ரத்தப்போக்கு உள்ள நோயாளிகளுக்கு இது 100 விழுக்காடு பயன் தரும். ஒருவர் பழைய சோறு சாப்பிட்டு அவருக்கு தொடர்ந்து வயிறு, குடலில் பிரச்சனை இருந்தால் அவருக்கு புற்றுநோய் அல்லது வேறு ஏதேனும் நோய் தாக்கியிருக்கும். தொடர்ந்து சாப்பிட்டால் பழைய சோறு உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்தும்.
சர்க்கரை நோயும் பழைய சோறும்
மேலும் நோய் ஏதும் வராமல் தடுக்கும் அருமருந்தாக இந்தப் பழைய சோறு உள்ளது. பழைய சோறு சாப்பிட்டு வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் கட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது. பழைய சோற்றை மண் சட்டி அல்லது மண்பானையில் ஊற வைத்து சாப்பிடும்போது அது இன்னும் அதிக பலனளிக்கிறது. சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரை குடலில் ஏற்படும் அலர்ஜியால் அது உடலில் இன்சுலின் செயல்பாட்டைக் குறைக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து பழைய சோறு சாப்பிட்டால் குடலில் உள்ள அலர்ஜி சரியாகி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. தற்போது நாங்கள் சாதம் செய்ய பயன்படும் அனைத்து வகை அரிசிகளையும் ஊறவைத்து பழைய சோறாக மாற்றி எந்த வகை அரிசியில் எவ்வளவு கலோரிகள் சத்து உள்ளது என்பதைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம்.
மாதவிடாய், நீர்க்கட்டி பிரச்னைகள்
மேலும் பெண்களுக்கு தள்ளி போகும் மாதவிடாய் கோளாறுகள் பழைய சோறு சாப்பிட சரியாகும். மேலும் கர்ப்பம் தரிப்பதைத் தடுக்கும் நீர்கட்டி உள்ளோர் தொடர்ந்து பழைய சோறு சாப்பிட்டால் நீர்கட்டிப் பிரச்னையும் சரிசெய்யப்பட்டுள்ளது.
பொதுவாக பழைய சோற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சாப்பிட வேண்டும் என்ற தகவல் உள்ளது. ஆனால் பழைய சோற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சாப்பிட்டால் அது பழைய சோற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவை அழித்து விடுகிறது.
எனவே பழைய சோறு சாப்பிடும்போது சுவைக்காக சிறிதளவு வெங்காயம், பச்சை மிளகாய், காய்கறிக்கூட்டு போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். கடந்த ஏழு ஆண்டுகளில் குடல் ஓட்டை, குடல் அடைப்பு உள்ளோர் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை ஸ்டான்லி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.
மற்ற நோயாளிகளுக்கு பழைய சோறு சாப்பிட வலியுறுத்தி வருகிறோம். இந்தப் பழைய சோறில் இந்த அளவு நல்ல பாக்டீரியா வரக் காரணம் தவிட்டில் இருந்து கைக்குத்தல் மூலம் அரிசி எடுக்கப்படுவதாலும், தவிட்டில் பாக்டீரியாவை உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாலும், அதன் மூலமாக அரிசி சாதத்தில் மனித உடலுக்கு நன்மை விளைக்கும் அதிக அளவிலான பாக்டீரியா உற்பத்தி செய்யப்படுவதாலும் தான்” என அவர் தெரிவித்தார்.
உட்கொள்ளும் முறை
மேலும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகள் குறித்து உதவி பேராசிரியர் சதீஸ் தேவகுமார் கூறியிருப்பதாவது: ”நாங்கள் தற்போது இந்த ஆராய்ச்சியை 22 நபர்களிடம் பரிசோதித்துள்ளோம். அனைவரும் நல்ல பயன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் குடல் அலர்ஜி உள்ள 50 நபர்கள், சாதாரண நிலையில் உள்ள 50 நபர்கள் என ஆராய்ச்சியை மேற்கொண்டு செய்து வருகிறோம்.
தற்போது நமக்கு பெரும் சவாலாய் உள்ள சோம்பேறித்தனத்தை போக்கும் அற்புத மருந்தாக பழைய சோறு இருந்து வருகிறது. இந்த ஆய்வு செயல்முறை, ஆய்வக முறை என இரண்டு முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செயல்முறையில் நாங்கள் நோயாளிகளுக்கு பழைய சோறு சாப்பிட வலியுறுத்தி ஆய்வு செய்து வருகிறோம். மேலும் ஆய்வக முறையில் பழைய சோற்றை பொடியாக மாற்றி அதில் உள்ள பலன்கள் குறித்தும், சாதம் ஊற வைத்த தண்ணியையும் பொடியாக மாற்றி அதில் இருக்கும் பலன்கள் குறித்தும் ஆய்வுகள் செய்து வருகிறோம் ” எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள 20க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் தினமும் தங்கள் வீட்டிலேயே சாதம் செய்து அதனை ஊற வைத்து பழைய சோறாக மாற்றிய பின் ஆய்வகத்துக்கு எடுத்து வந்து ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்.
பொதுவாக மாலை நேரத்தில் சாதம் வைத்து அதனை ஊற வைத்து சாப்பிட்டால் நல்ல பலனளிக்கும் எனவும், காலையில் நாம் உண்ணும் அளவுக்கு பழைய சோறு சாப்பிட வேண்டும் எனவும், பழைய சோறை சாப்பிட்டு பின்பு இட்லி, தோசை போன்ற டிபன் உணவுகளை உண்ண வேண்டாம் எனவும் இந்த ஆராய்ச்சி மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அட கேழ்வரகில் இவ்வளவு நன்மைகளா..!