சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா, ஒமைக்ரான் அதிகரித்துவரும் சூழலில் பரவலைத் தடுக்கும்விதமாக தமிழ்நாடு அரசு இரவு நேர ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
மேலும் சென்னையில் 15 மண்டலங்களில் கரோனா உடல் பரிசோதனை மையம் திறக்கும் பணிகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள 350 படுக்கைகளுடன் கூடுதலாக 300 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி பெற்றுவரும் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் 10 பேர், செவிலியர் உள்பட 15 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதில் பாதி பேர் விடுதியல் தங்கியிருந்தும், பாதி பேர் வீடுகளுக்குச் சென்றுவந்தும் மருத்துவப் பயிற்சியை மேற்கொண்டுவந்துள்ளனர். கரோனா உறுதிசெய்யப்பட்ட அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
மேலும் சிலர் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். கரோனா, ஒமைக்ரான் போன்றவற்றின் பரவல் அதிகரித்துவரும் நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர் 15 பேருக்கு ஒரே வாரத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அங்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தட்டச்சு பயிற்சி நிலையங்கள் மூடல் - தொழில்நுட்ப கல்வி இயக்கம்