சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், வருமான வரித்துறையினர் இன்று 3 குழுமங்கள் உட்பட 28 இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் ஆகியோரது வீடுகள், சேத்துபட்டு கியூ ஸ்கொயர் அலுவலகம், எஸ்.என்.ஜே நிறுவன உரிமையாளர் ஜெயமுருகனுக்கு சொந்தமான இடங்கள், அண்ணா நகர் திமுக வேட்பாளர் உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் வீடுகள் மேலும், சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 28 இடங்களில் இச்சோதனையானது காலை முதலே நடந்து வந்தது.
ஸ்டாலின் மகள் மற்றும் அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகன் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற போது, திமுகவினர் அதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதோடு, வருமான வரிச்சோதனையை மத்திய அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செய்வதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சோதனைக்கான விளக்கத்தை வருமான வரித்துறையினர் அளித்துள்ளனர். அதில், வரி ஏய்ப்பு புகார், மற்றும் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தில் மூன்று குழுமங்கள் உள்ளிட்ட 28 இடங்களில் சோதனை நடத்தியதாகவும், இந்த சோதனையில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான சில ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், தொடர்ந்து சில இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் கடந்த 11 மணி நேரமாக நடந்த சோதனை நிறைவடைந்தது. இதில் எவ்வித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்றும், வீட்டுச் செலவிற்காக வைத்திருந்த ஒரு லட்சத்து 36 ஆயிரம் பணம் மட்டுமே அங்கிருந்ததாகவும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆனைமலை தனியார் விடுதியில் பணப் பட்டுவாடா?