மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பாராத அளவில் பேரிடி விழுந்துள்ளது. குறிப்பாக, ராகுல்காந்தி தலைவராக தோற்றது என விரக்தியின் அவர் உச்சத்துக்கே சென்றிருப்பதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி கடிதம் அளித்தார்.
ஆனால் அதனை ஏற்க கட்சி மறுத்துவிட்டது. மேலும், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களான வேணுகோபால், அகமது படேல் ஆகியோர் நேற்று காலை ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர். அப்போது, முடிவை கைவிட ராகுலிடம் அவர்கள் வலியுறுத்தியதாகவும் அதற்கு, தனது முடிவில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ராகுல் காந்தியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, தேர்தலில் தோற்றாலும் மக்கள் மனதை வென்றிருக்கிறீர்கள். எனவே காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என அவர் ராகுலிடம் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.