விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு உள்ளிட்ட தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய அணிகலன் தயாரிக்க பயன்படும் ஜாஸ்பர், சார்ட் என்ற கற்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில் அகழ்வாராய்ச்சி பணிகளில் இதுவரை 14 குழிகள் தோண்டப்பட்டு சுமார் 6000 தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: "மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்" அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
இந்நிலையில் இன்று புதிதாக தோண்டப்பட்ட குழியில் விரலால் சுண்டி விளையாடப்படும் சுடுமண்ணால் ஆன விளையாட்டு பொருள், சங்கு வளையல்கள், ஆணி கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ''முன்னோர்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு சான்றாக பல்வேறு பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது விரலால் சுண்டி விளையாடப்படும் பொருள்கள் கிடைத்துள்ளது. இரும்பு காலத்திற்குச் சான்றாக ஆணி கிடைத்துள்ளது. தொழில்கள் நடந்ததற்கு சான்றாக பல்வேறு அலங்காரங்களில் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்