சென்னை: கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற 16வது தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தலின் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளி வந்தது. இந்த தேர்தலில் திமுக 133 (உதயசூரியன் சின்னத்தில் 8 இடங்களில் கூட்டணி கட்சிகள்) இடங்களில் வென்று அறுதி பெரும்பான்மையை பெற்றது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (மே 4) மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்புரையாற்றிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்திட, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்திட திமுக சட்டப்பேரவைக் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலினை, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
13ஆவது முதலமைச்சராகிறார் ஸ்டாலின்
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று (மே 5) காலை 10 மணியளவில், தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து, திமுகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தினை அளிக்கிறார்.
கரோனா பரவல் காலம் என்பதால் பதவியேற்பு நிகழ்ச்சியை ஆடம்பர விழாவாக நடத்தாமல் மிக எளிமையாக ஆளுநர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளோம் என ஸ்டாலின் கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் 13ஆவது முதலமைச்சராக பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் செங்கல்பட்டில் 11 பேர் உயிரிழந்த பரிதாபம்