சென்னை: கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் இரவுப் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜிகாதி தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவ்ஃபிக் ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து கேரளா தப்பிச் செல்லும்போது களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளின் தொடர்பு இருந்ததால், வழக்கானது பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து வில்சனை சுட்டுக் கொன்ற அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் முதலில் கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்டவர்களிடம், தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையில், இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ் கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி காஜா மைதீன் மற்றும் மெகபூப் பாஷா, ஜாபர் அலி, இஜாஸ் பாஷா, சிஹாபுதின் ஆகியோர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உதவுவது, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட வெடி மருந்துகள் ஆகியவற்றை சட்டவிரோதமாக தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பது, தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது போன்ற செயல்களில் ஈடுபட்டது அம்பலமானது.
இதனையடுத்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேசிய புலனாய்வு அலுவலர்கள் அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பிடிபட்டவர்கள் மீது கடந்த ஆண்டு ஜூலை மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தப்பித்து வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த சகாபுதின் என்கிற சிராஜ்தீன் என்பவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து தேசிய புலனாய்வு அலுவலர்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுதமும், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் வாங்கி கொடுத்து உதவியது சகாபுதின் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரைத் தேடப்படும் குற்றவாளியாக தேசிய புலனாய்வு அலுவலர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், தீவிரவாதி சகாபுதின் இன்று சென்னை விமானநிலையத்தில் குடியுரிமை அலுவலர்களிடம் பிடிபட்டார்.
கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்களை குடியுரிமை அலுவலர்கள் பரிசோதித்தனா். அப்போது கேரளா மாநிலத்தைச் சோ்ந்த சகாபுதீன் (35) என்ற பயணி, கேரளா மாநில காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்ததையடுத்து, அவரைப் பிடித்து விசாரணை செய்தனர்.
காபுதீன் மீது திருவனந்தபுரம் காவல்துறையினர் கடந்த ஓராண்டிற்கு முன்பு அனைத்து விமான நிலையங்களுக்கும் LOC கொடுத்து வைத்திருந்தனா். இதையடுத்து குடியுரிமை அலுவலர்கள் அவரை பிடித்து தனி அறையில் அடைத்து வைத்தனா். அதோடு கேரள மாநில காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்தான், கன்னியாகுமரி சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களால் ஓராண்டு காலமாக தேடப்பட்டுவந்தவர் சகாபுதீன் என தெரியவந்தது. இதனையடுத்து முதற்கட்டமாக தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களிடம் சகாபுதீனை ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: சென்னையில் தீவிரவாதி கைது!