இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "அடுத்த 100 நாட்களுக்குள் தனியார்மய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என கடந்த ஜூன் மாதம் தொடர்வண்டித்துறையை அறிவித்தது. அதன்படி ஒரு வந்தே பாரத், இரண்டு தேஜாஸ் தொடர்வண்டிகள் ஐஆர்சிடிசி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 60 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இவற்றில் கட்டணம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
மும்பை-லக்னோ இடையேயான தேஜாஸ் தொடர்வண்டியின் குளிர்சாதன பெட்டிகளுக்கு 725 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், ஐஆர்சிடிசி வசம் சென்ற பிறகு 1,200 ரூபாய்க்கு மேல் கட்டணம் உயர்ந்துள்ளது. முன்பதிவு செய்யும்போது அதன் கட்டணம் கிட்டத்தட்ட 3,000 ரூபாயை நெருங்குகிறது. இதேபோல் ஐஆர்சிடிசி வசம் உள்ள அனைத்து தொடர்வண்டிகளிலும் கட்டணம் பன் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்வண்டித்துறை தொடர்ந்து தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக 109 வழித்தடங்களில் 150 தொடர்வண்டிகளை தனியார் மூலம் இயக்க முடிவு செய்துள்ளதாக இந்திய தொடர்வண்டித்துறை தெரிவித்துள்ளது. அதேபோல 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றுவோரை கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தொடர்வண்டித்துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 6 லட்சம் தொழிலாளர்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐசிஎஃப் போன்ற தொடர்வண்டி பெட்டி தொழிற்சாலைகள் கார்ப்பரேட் மயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். சாமானியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் முற்றிலுமாக நீக்கப்படும். ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, நாளை (செப்டம்பர் 19) இரவு 8 முதல் 8:10 மணி வரை விளக்குகளை அனைத்து பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பின்னலாடை துறையில் சீனாவை வெல்ல என்ன செய்ய வேண்டும்?