சென்னை: சென்னை அண்ணா நகரை சேர்ந்த ராஜேந்திர ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 1968இல் சர்வதேச இந்திய வர்த்தக கண்காட்சி சென்னை அண்ணா நகரில் நடந்தபோது, மக்களை கவர்வதற்காக அண்ணா நகர் கோபுரத்துடன் கூடிய டவர் பூங்கா உருவாக்கப்பட்டு, அப்போதைய துணை குடியரசு தலைவராக இருந்த வி.வி.கிரி மற்றும் அப்போதைய முதலமைச்சர் சி.என். அண்ணாத்துரை தொடங்கிவைத்தனர்.
15 ஏக்கருக்கும் மேல் உள்ள பூங்காவிற்குள் 12 மாடிகளுடன் 135 அடி உயரத்தில் கோபுரம் கட்டப்பட்டு, சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது. பறவைகளை காணுமிடம், பேட்மிட்டன் மைதானம், நடைபயிற்சிக்கான இடம், குழந்தைகள் விளையாட்டுத் திடல், ஏரி ஆகியவை அமைந்துள்ளன. கடந்த 2010இல் பூங்காவை சீரமைக்க 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டு திறக்கப்பட்ட நிலையில், பூங்காவில் நடைபெற்ற தற்கொலை சம்பவங்களை அடுத்து கோபுரத்தில் ஏற தடைவிதிக்கப்பட்டது.
1990க்கு முன் பூங்காவிற்குள் இருந்த ஏரியில் படகு சவாரி, மீன் பிடித்தல் போன்றவை நடைபெற்றது. தற்போது ஏரியில் கழிவு நீர் கலக்க அனுமதிக்கப்பட்டதால், ஏரி முழுமையாக கருமையாக உள்ளதுடன், நச்சுத்தன்மை உடையதாக மாறியுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளனர்.
ஏரியை மீட்டெடுக்க வகுக்கப்பட்ட திட்டங்களையும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் தாக்கல் செய்ய அரசுக்கும், மாநாகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும். ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஏரியை பராமரிக்க வேண்டும். ஏரி முறையாக பராமரிக்கப்படுவதை கண்காணிக்க உயர் மட்ட குழு அமைக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து தமிழக அரசு, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கேட்டு நளினி மனுத்தாக்கல்