அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதல் கடிதத்தை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளதாக துணைவேந்தர் சூரப்பா தமிழ்நாடு அரசிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனிடம் கேட்டபோது, ”தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதிக்கும் எந்த செயலுக்கும் இந்த அரசு ஒப்புக்கொள்ளாது. 69 சதவீத இட ஒதுக்கீடு, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும் என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தால் மட்டுமே அரசு இதனை ஏற்றுக்கொள்ளும்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து பெறுவதில் உள்ள நன்மைகள், தீமைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் அடங்கியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு செய்து அதன் அறிக்கையை முதலமைச்சரிடம் அளிக்கும்.
இதுமட்டுமல்லாது, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து பெறுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மட்டும் ஆய்வு செய்வதற்காக துணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு குழுக்களின் அறிக்கை அடிப்படையிலேயே, முதலமைச்சர் இவ்விவகாரத்தில் ஆராய்ந்து இறுதி முடிவெடுத்து அறிவிப்பார்“ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கில் ஐ.டி நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் - அரசு அறிவுரை !