சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் 2012, 2013ஆம் ஆண்டு 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்டு அரசாணை 400இன்கீழ் சுமார் 500 பேர், சிறப்பு காலமுறை ஊதியத்தில் காவல் துறைக்குத் தூய்மைப் பணியாளர்களாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கல்வித் துறையிலும் தூய்மைப் பணிகளில் 2000 பேர் சேர்க்கப்பட்டனர். 2018ஆம் ஆண்டு கல்வித் துறையில் பணியாளர்களாகச் சேர்ந்தவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது.
அதேபோல தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, காவல் துறை தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவு, டிஜிபி அலுவலகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் 2020 செப்டம்பர் மாதம் நீதிபதி தண்டபாணி கல்வித் துறை தூய்மைப் பணியாளர்களுக்குச் செய்யப்பட்ட பணி நிரந்தர ஆணை, காவல் துறை தூய்மைப் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்று கூறி அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து அந்தப் பரிந்துரையை நிறைவேற்றக் கோரி சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல் துறை தூய்மைப் பணியாளர்கள் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விவகாரத்தைக் கவனத்திற்கொண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனக் கோரிக்கைவிடுத்த அவர்கள், 500 பேர் பணியில் சேர்க்கப்பட்டதில் தற்போது 365 பேர் மட்டுமே உள்ளனர் எனவும், அவர்களில் 75 விழுக்காடு கைம்பெண்கள் என்றும் தெரிவித்தனர்.
போதிய வருமானம் இல்லாததால் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு ஒருவர் தற்கொலையும் செய்துகொண்டார் என்று கூறிய அவர்கள், மேலும் சுமார் 60 மாற்றுத்திறனாளிகள் இந்த பணியில் இருப்பதால் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.
இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழக அரியர் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு