ஆண்டு தோறும் மகரவிளக்கு பூஜையையொட்டி கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வார்கள், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம் மேற்கொள்வார்கள்.
கார்த்திகை மாதம் முதல் மாலை அணிந்து ஐயப்ப பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்குவார்கள். அந்தவகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை மாதம் பிறக்க உள்ளது. அன்றைய தினம் முதல் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள்.
மண்டல பூஜைக்காக நாளை மாலை 5 மணியில் இருந்து டிசம்பர் 27ஆம் தேதி இரவு வரை நடை திறந்திருக்கும். மீண்டும் மூன்று நாள்கள் மூடப்பட்டு மகரவிளக்கு திருவிழாவுக்காக டிசம்பர் 30ஆம் தேதி ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்டு ஜனவரி 15 மகரவிளக்கு தினம் 2020இல் வருவதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
ஐயப்ப பக்தர்கள் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சபரிமலைக்கு பயணம் மேற்கொள்வதற்காக சிறப்பு ரயில்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லாததால், தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து. இந்தாண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அடுத்த ஜனவரி 20ஆம் தேதி வரை 64 அதநவீன சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து 55 பேருந்துகளும், திருச்சி, மதுரை, புதுவை ஆகிய இடங்களில் இருந்து தலா இரண்டு பேருந்துகளும், தென்காசியிலிருந்து மூன்று பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் 94450 14412, 94450 14450, 94450 14424 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ள அரசு போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சபரிமலை தீர்ப்பை மதித்து நடந்துகொள்ளுங்கள் - மதுரை ஆதீனம் பேட்டி