தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (அக்.23) ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நேற்று (அக்.22) மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்னும் சில மணி நேரங்களில் சாகர் தீவு - சுந்தர்பன் காடுகள் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும், வரும் 28ஆம் தேதி தொடங்கவுள்ள வடகிழக்குப் பருவமழை, இந்த ஆண்டு வட தமிழ்நாட்டில் இயல்பான மழையாகவும், தென் தமிழ்நாட்டில் இயல்பை விடக் குறைவானதாகவும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!