சென்னை: கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடித்துள்ள 'கள்ளன்' திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் இன்று (மார்ச்.18) வெளியாகியுள்ளது. தென்தமிழ்நாட்டில் இப்படத்தை வெளியிட ஒருசிலர் எதிர்ப்புத் தெரிவித்து ஆபாசமாக வாட்ஸப்பில் பதிவிட்டு வருதாகத் தயாரிப்பாளர் மதியழகன், இயக்குநர் சந்திரா இருவரும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து திருச்சி, மதுரை, தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் படத்தின் தலைப்பை மாற்றவேண்டும் எனக்கூறி சிலர் மிரட்டல் விடுத்து வருவதாக, இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் கூட்டாக சேர்ந்து கூறியுள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் கூறுகையில், 'கள்ளன் என்ற தலைப்புக்கும் எந்த சமூகத்துக்கும் தொடர்பு இல்லை. திருடன் என்பதைக் குறிக்கவே தலைப்பு வைத்தேன். பட வெளியீட்டுக்குப் பிறகு படத்தின் தலைப்பை மாற்றக் கோருவது எந்தவித நியாயமும் இல்லை' என படத்தின் இயக்குநர் சந்திரா கூறியுள்ளார்.
தணிக்கைச் சான்றிதழ் பெறப்பட்டு, படத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு படத்தின் தலைப்பை மாற்றவேண்டும் என்று மிரட்டல் விடுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இயக்குநர் சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் உடன் பணியாற்ற ஆசை - மிஷ்கின்!