தென்னக ரயில்வேயால் மேற்கொள்ளப்பட்ட தூய்மையே சேவை இயக்கம் குறித்தும், தென்னக ரயில்வேயின் சாதனைகள் குறித்தும் கூறுவதற்காக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ரயில் நிலையங்களில் தூய்மை மேம்படுத்தும் நோக்கில் குப்பை போடுவதற்கு எதிராகவும், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராகவும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இருபத்து ஏழாயிரத்து நானூற்றி ஐம்பத்திரண்டு காந்தி போஸ்டர்கள் ரயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டுள்ளன. தூய்மையே சேவை இயக்கத்தின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களில் 21 பிளாஸ்டிக் மறுசுழற்சி எந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. காந்தி ஜெயந்திக்கு முன்னதாக, மேலும் ஏழு பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள் நிறுவப்படும்.
நடப்பு 2019 - 20ஆம் நிதியாண்டில் தென்னக ரயில்வே தனது வருவாயை எட்டு விழுக்காடு அதிகரித்துள்ளது. பயணிகள் மூலம் கிடைக்கும் வருவாய் பத்து சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சென்னையின் குடிநீர்ப் பற்றாக்குறையை போக்கும் வகையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து வில்லிவாக்கத்திற்கு 141 நடைகளில் தினந்தோறும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 112 கிலோ மீட்டர் இரட்டை ரயில் பாதை, 327 கிலோமீட்டர் மீட்டர் தூரத்திற்கு அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் தென்னக ரயில்வேயில் உள்ள அனைத்து ஆளில்லா ரயில்வே கிராசிங்களும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.
இன்டர்லாக்கிங் என்றழைக்கப்படும் எதிரெதிர் திசையில் இரண்டு ரயில்கள் வருவதைத் தவிர்க்கும் பாதுகாப்பு நடைமுறை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பல்லவன், வைகை, சென்னை- திருவனந்தபுரம் உள்ளிட்ட ரயில்களில் LHB எனப்படும் நவீன பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. 98.7 விழுக்காடு ரயில் பெட்டிகளில் பயோ டாய்லெட் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிவறைகள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை எழும்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம், மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி 121 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றுவருகிறது. கொருக்குப்பேட்டை பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். அடுத்த ஓர் ஆண்டுக்குள் இந்த பணி நிறைவடையும். சென்னையிலிருந்து மன்னார்குடி செல்லும் அகல ரயில்பாதை ஆள் பற்றாக்குறை காரணமாக தாமதம் அடைந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ரயில்வே தேர்வில் 90% வட மாநிலத்தவர் தேர்ச்சி..! அதிர்ச்சி ஏற்படுத்திய தரவுகள்!