கறுப்பு காந்தி என போற்றப்படும் கர்மவீரர் காமராஜரையும் அக்டோபர் 2ஆம் தேதியையும் பிரிக்க முடியாது.
அது குறித்து பார்ப்போம்.
காந்திய கொள்கை
காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 16 வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் காமராஜர். அக்கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டு 1921ஆம் ஆண்டு மதுரையில் காந்தியை நேரில் சந்தித்தார். தேசத் தந்தையை சந்தித்த மகிழ்ச்சி மனதை பரவசப்படுத்தியது. அதேவேகத்தில், தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் காங்கிரஸ் கட்சியை கொண்டுசென்றார் காமராஜர்.
3 முறை முதலமைச்சர்
காமராஜர் தனது 34ஆவது வயதில் 1937ஆம் ஆண்டு சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினராக முதன் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அவர் பார்க்காத சிறைகளே இல்லை என்றே சொல்லலாம். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையிலேயே வாழ்க்கையை கழித்தார்.
1954ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற காமராஜர் பின்னர் 1957, 1962ஆம் ஆண்டுகள் நடைபெற்ற தேர்தல்களிலும் தொடர் வெற்றிபெற்று மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக நீடித்தார்.
கல்விக்கண் திறந்த படிக்காத மேதை!
தனது ஆட்சிக் காலத்தில் ஏராளமான பள்ளிகளைத் திறந்ததோடு பள்ளி பணி நாள்களை 180 லிருந்து 200 ஆக அதிகரித்தார் காமராஜர். நாடு போற்றும் மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகம் செய்து ஏழைகளின் நெஞ்சில் குடிபுகுந்தார்.
அவரது தீவிரமான முயற்சியால் ஏழு விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் 37 விழுக்காடாக அதிகரித்தது. அதனால்தான் 'கல்விக்கண் திறந்த காமராஜர்' என மக்கள் போற்றுகின்றனர்.
நீர்வளம் காக்க அணைகள் கட்டி சாதனை
பவானி, வைகை, மணிமுத்தாறு, சாத்தனூர், கிருஷ்ணகிரி போன்ற முக்கிய அணைகள் எல்லாம் அவரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவைதான்.
என்.எல்.சி., திருச்சியில் பாரத மிகுமின் நிறுவனம், சென்னையில் சி.பி.சி.எல்., ஐ.சி.எஃப். என தமிழ்நாட்டின் பிரதான தொழில் நிறுவனங்கள் எல்லாம் காமராஜரின் முயற்சியால் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.
முதலமைச்சர் பதவியை தூக்கியெறிந்த காமராஜர்
ஒன்பதாண்டு காலம் முதலமைச்சராக இருந்து பொற்கால ஆட்சியை கொடுத்த காமராஜர், கட்சிப் பணியாற்ற மூத்தத் தலைவர்களை வலியுறுத்தியதோடும் முன்மாதிரியாக தானே 1963 அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாளில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரைப் பின்பற்றி லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் உள்பட ஆறு மத்திய அமைச்சர்களும் ஆறு மாகாண காங்கிரஸ் முதலமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
கிங் மேக்கர்
பதவியை ராஜினாமா செய்த பிறகு தேசிய அரசியலில் கோலோச்சியதோடு லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராவதில் பெரும்பங்கு ஆற்றியவர் காமராஜர்.
55 ஆண்டுகள் நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜர் 1975 அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த தினத்தில் மறைந்தார். பெருந்தலைவர் காமராஜர், தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.
புரட்சி
கற்றுணர்ந்த சான்றோர், மக்களுடன் இணைந்து தமிழ் மொழியை அறிவியல் தொழில்நுட்ப பாடங்களில் வெளிவரச் செய்தவர்.
அணைகள் கட்டி விவசாயப் புரட்சிக்கு வித்திட்டார். தொழிற்சாலைகள் கொண்டுவந்து கனரக புரட்சியை ஏற்படுத்தினார். இன்று லாபகரமாக இயங்கும் பல தொலைநோக்குத் திட்டங்கள் இவர் கொண்டு வந்ததுதான்.
இறுதிக் காலம்
இவ்வாறு பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான கறுப்பு காந்தி காமராஜர், தேசப் பிதா மகாத்மா பிறந்த தினத்தில் மறைந்தார்.
பாரதம் போற்றும் தேசப்பிதா பிறந்த தினத்தில் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அதே நாளிலேயே மறைந்தார்!
#BlackGandhiKamarajar