தம்முடைய சமூகத்தின் வரலாற்றை, தமக்குப் பின் வரும் சந்ததிக்கு எடுத்துக் கூறவில்லையெனில், அச்சமூகம் அழிந்து விடும் என அவைமுன்னவர் துரைமுருகன் என சமூக நிதி குறித்து சட்டப்பேரவையில் பேசினார்.
மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சிறு,குறு நடுத்தர தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டிற்காகப் போராடியவர்களுக்கு மணிமண்டபம் கட்டித்தரப்படும் என முதலமைச்சர் 110 விதியின் கீழ், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வில் அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துப் பேசினார்கள்.
நாம் பட்ட கஷ்டம்; நம்முடைய பிள்ளைகள் படக்கூடாது
அதன்பின் பேசிய அவைமுன்னவர் துரைமுருகன்,
'திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவறமாட்டோம். நாம் அனைவரும் இந்த சட்டப்பேரவையில் இருப்பதற்கு சமூக நீதியும்,கொள்கையும் உள்ளத்திலிருக்கும் வெளிப்பாடு தான்.
திராவிட இயக்கத்தின் கொள்கை என் நெஞ்சில் ஊறியது.
நாம், நம்முடைய சமூகத்திற்காகப் பட்ட கஷ்டம்; நம்முடைய பிள்ளைகளும் படக்கூடாது என அவர்களை வளர்க்கிறோம். ஆனால், பிள்ளைகளுக்கு வரலாற்றைக் கூறவிடாமல் மறுக்கும் சமுதாயம் நினைவிழந்த சமுதாயமாக, அழிந்து போய்விடுகிறது.
கலைஞரின் மறு அவதாரம் ஸ்டாலின்
அன்று ஒரு சமூகப்போராட்டம் நடத்தியபோது திமுக முப்பெரும் விழா நடத்திய நேரத்தில் வாங்கிய அடி, எங்களுக்குத் தான் தெரியும். இனத்தைக் காக்க வாரியம் அமைத்தவர், கலைஞர் கருணாநிதி.
அப்படிப்பட்ட கலைஞரின் மறு அவதாரமாக இருப்பவர் முதலமைச்சர் ஸ்டாலின்.
அவருடன் எப்போதும் நான் உடனிருப்பேன். இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும், நான் இருப்பேனோ இல்லையோ அவர் இருப்பார்.
பிள்ளைகளுக்கு சமுதாய வரலாற்றைக் கூறவேண்டும். இனம், மொழிப்பற்று ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும். சமுதாய வரலாற்றைப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கவில்லையெனில், சமூகம் அழிந்தே போய்விடும்' என சமூக நீதி பேச்சை அவையில் முன்வைத்தார்.
இதையும் படிங்க: பொது சொத்துகளை விற்பது தேச நலனுக்கு எதிரானது - மு.க. ஸ்டாலின்