சென்னையில் மழை நீர் வடிகால் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதால், மாநகரில் பெரும்பாலான பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, இது சம்பந்தமாக சென்னை பெருநகர மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரப்போகும் மழை - பேருந்து நிறுத்தங்கள் எங்கே? இன்னும் ஒன்று (அ) இரண்டு மாதங்களில் வட கிழக்குப்பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னை பெருநகர மாநகராட்சி மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால், பல இடங்களில் தோண்டப்பட்டுள்ள குழிகளால், மாநகரப்பேருந்துகளின் நிழற்குடைகள் சேதப்படுத்தப்பட்ட (அ) அகற்றப்பட்ட நிலையில் உள்ளன. சில இடங்களில் நிழற்குடைகள் ஏற்கெனவே இருந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அவதியுறும் பயணிகள்: சென்னையைப் பொறுத்தவரை சில நாட்களில் மழையும், வெயிலும் பொழிகிறது. நிழற்குடைகள் இல்லாததால் பயணிகள் சாலையோரங்களில் நின்று பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். நிழற்குடைகள் அகற்றப்பட்டுள்ளதால் பேருந்துகளும் குறிப்பிட்ட நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் நேரத்திற்கு தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல இயலவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

பேருந்து நிறுத்தங்களை நவீனமாக்கும் பணி: மாநகராட்சி அலுவலர்களின் கூற்றுப்படி, 'சென்னை நகரத்தில் உள்ள 1,000 பேருந்து நிழற்குடைகளை நவீன துருப்பிடிக்காத ஸ்டீலால் தங்குமிடங்களாக மாற்றுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள 844 நிழற்குடைகளை வெப்ப-எதிர்ப்பு கூரைகள் மற்றும் பாதை எண்கள் மற்றும் நிறுத்தங்களின் பெயர்களைக் கொண்ட, டிஸ்ப்ளே பேனல்கள் ஆகியவற்றைச்சேர்க்கும் வகையில் புதுப்பிக்கும் பணி என இந்த திட்டத்தில் அடங்கும்' எனத் தெரிவித்தனர்.
பணிகளை துரிதப்படுத்தக்கோரிக்கை: இதுகுறித்து தினசரி பேருந்து பயணி, ஜார்ஜ் நம்மிடம் கூறுகையில், "அரசு இந்த மழை நீர் வடிகால் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். இந்த இடத்தில் மட்டுமல்லாமல் நகரத்தின் பல பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது. தற்போது, வெயில் அதிகமாக உள்ளது.

மேலும் மழை வந்தால் கூட ஒதுங்குவதற்கு இடம் இல்லை. ஆனால், நிழற்குடைகள் இருந்தால் அவைகள் நமக்கு பாதுகாப்பாக இருக்கும்" எனத் தெரிவித்தார். எனவே, அரசு இதனைக் கருத்தில்கொண்டு இப்பணிகளை துரிதப்படுத்தி நிழற்குடைகளை, ஏற்கெனவே இருந்த இடத்தில் நிறுவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
கவிழ்ந்தபடி உள்ள கட்டுமானப்பொருட்கள் - முடிவுக்கு வருவது என்று? சமூக ஆர்வலரும் சிட்லபாக்கம் குடியிருப்போர் நல சங்கத் தலைவருமான பி. விஸ்வநாதன் கூறுகையில், "மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகளை பல இடங்களில் மாநகராட்சி அலுவலர்கள் விரைவுப்படுத்தவில்லை.
இதனால், பேருந்து நிழற்குடைகளை அகற்றியுள்ளனர். பல நிழற்குடைகள் அப்படியே சாலைகளின் ஓரங்களில் கவிழ்த்தப்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களாகவே அதே இடங்களில் கிடக்கின்றன. இதனால், பேருந்து பயணிகள் மத்தியில் கவலை எழுந்துள்ளது" என்றார்.
மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவை என இருந்தாலும், மாநகரப்பேருந்துகள் சென்னைவாசிகளின் பயணங்களில் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்பதை அலுவலர்கள் உணர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இம்மாதம் இறுதிவரை பார்க்கலாம்: இதுகுறித்து சென்னை பெருநகர மாநகராட்சியின் பொறியாளர் ஒருவர் கூறுகையில், "மழை நீர் வடிகால் கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மேலும், 15 மண்டலங்களிலும் தினந்தோறும் பணிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. பேருந்து நிழற்குடைகளைப் பொறுத்தமட்டில் அகற்றப்பட்ட நிழற்குடைகள் திரும்ப அதே இடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் அனைத்து நிழற்குடைகளும் சரி செய்யப்பட்டு பயணிகளின் வசதிக்கேற்ப பேருந்து நிறுத்தம் அதே இடங்களில் நிறுவப்படும்" என விளக்கம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பச்சை தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.30 விலை வழங்குக' - சிறு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதப்போராட்டம்