முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி குறித்து, தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் காவல் ஆணையரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மண்டல தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் ராஜ் சத்யன், “சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியது கண்டிக்கத்தக்கது.
திமுக என்றாலே அவதூறுதான். அவதூறுகளை பரப்புவதால் ஓட்டு பெருகும் என நினைக்கின்றனர். ஆனால், வரும் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இனியும் ஆர்.எஸ்.பாரதி இது போன்று பேசுவதை நிறுத்திக் கொள்வதோடு, உடனடியாக மன்னிப்பும் கேட்க வேண்டும். சென்னை உட்பட 10 வருவாய் மாவட்டங்களிலும், இதே போல் ஆர்.எஸ்.பாரதி மீது காவல் நிலையங்களில் புகாரளித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இஸ்லாமிய மக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்!