சென்னையில் 2016ஆம் ஆண்டு ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பெற்றுள்ளது ஒரு கும்பல். பின்னர் ஸ்கிம்மர் கருவி மூலம் பெற்ற விவரங்களைப் போலியான பற்று அட்டை தயாரித்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் சேமிப்பு நிலையங்களை இரவு நேரத்தில் அந்தக் கும்பல் தேர்ந்தெடுத்து, அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் இரண்டாயிரம் ரூபாய் தரகு தருவதாக ஆசைவார்த்தைக் கூறி போலியாகத் தயாரித்த பற்று அட்டை மூலம் 24 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளனர்.
பின்னர் இரண்டாயிரம் ரூபாய் காரில் பெட்ரோல் போட்டுக் கொண்டும், ஊழியர்களுக்குத் தரகு தொகையாக ரூ.2000 கொடுத்துவிட்டு மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாயை அந்தக் கும்பல் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த மோசடி பற்றி பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் மற்றவர்களுக்குச் சந்தேகம் ஏற்படும்போது பற்று அட்டையைக் காட்டி சமாளித்துவந்துள்ளனர். இதனிடையே, வாடிக்கையாகக் கொள்ளையடித்துவந்த அந்தக் கும்பலைச் சேர்ந்த சபி சேக், சிவ பாபு ஆகியோரை சிபிசிஐடி காவல் துறையினர் 2016ஆம் ஆண்டு கைதுசெய்தனர்.
இதனையடுத்து இந்தக் கொள்ளைக் கும்பலின் முக்கியக் குற்றவாளியை கடந்த நான்கு ஆண்டாக சிபிசிஐடி காவல் துறையினர் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், விரைந்து சென்ற காவல் துறையினர் முக்கியக் குற்றவாளியான கோவிந்தனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க...காட்டிக்கொடுத்த டேப்... மாட்டிக்கொண்ட கொலையாளிகள் - காவலாளி கொலையில் துப்பு துலங்கியது எப்படி?