சென்னை: தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையையும் மீறி சில நபர்கள் திருட்டுதனமாக லாட்டரி சீட்டுகள் விற்று வருகின்றனர். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மயிலாப்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழு அப்பகுதியின் மசூதி தெருவில் ரகசியமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
3 பேர் கைது
அப்போது ஒரு ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த மூன்று நபர்கள் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டுக் காகிதத்தில் எழுதிக் கொடுத்து ரகசியமாக விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் அறிந்தனர். அதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சென்னை கானாத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன், நங்கநல்லூரைச் சேர்ந்த முருகன், மந்தைவெளி சேர்ந்த குணசேகரன் ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 ஆயிரத்து 770 ரூபாய் ரொக்கம் மற்றும் ஆட்டோ, பைக், இரண்டு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பூந்தமல்லியிலும் விற்பனை
அதேபோல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சரஸ்வதி சதுக்கம் என்ற இடத்தில் சட்டவிரோதமாக ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து விற்பனை செய்து வருவது குறித்து செம்பியம் காவல் நிலைய ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வியாசர்பாடியை சேர்ந்த சரவணன், பெரம்பூரை சேர்ந்த பிரபாகரன், வியாசர்பாடியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கையில் இருந்த செல்போனை பிடுங்கிச் சென்ற திருடர்கள்!