சென்னை: மருத்துவக் காரணங்களை காட்டி சிவசங்கர் பாபாவை ஜாமீனில் எடுக்க அவரது தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வந்த சிவசங்கர் பாபா:
டெல்லியில் கைது செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா-வை சி.பி.சி.ஐ.டி போலீசார் விடிய விடிய தொடர் விசாரணை நடத்தி தற்பொழுது அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தபின் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்கின்றனர்.
சிவசங்கர் பாபா மீது எழுந்த புகார்கள்:
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்த நிலையில், மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது 3 புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி கடந்த 13 ஆம் தேதி டி.ஜி.பி திரிபாதி உத்தவிட்டார். மாணவிகள் மூலம் பெறப்பட்ட 3 புகார்களின் அடிப்படையில், 3 தனிப்படைகள் அமைத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சிவசங்கர் பாபா கைது நடவடிக்கை:
சிவசங்கர் பாபா உடல்நலக் குறைவு காரணமாக டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி ஜனனி, மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த 11 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசாரின் தனிப்படையொன்று டேராடூனுக்கு விரைந்தது. மற்ற இரு குழுக்கள் சுஷில் ஹரி பள்ளிக்கு நேரடியாகச் சென்றும், புகார் அளித்த மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றும் சிவசங்கர் பாபா-விற்கு எதிரான முக்கிய ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் இருக்க அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
டேராடூனுக்கு சென்ற சி.பி.சி.ஐ டி தனிப்படையினர் மூலம் சிவசங்கர் பாபா டேராடூன் தனியார் மருத்துவமனையில் இல்லை என்ற தகவல் தெரியவந்தது. இதனையடுத்து அவர் தப்பியோடி இருக்கலாம் என்ற அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் டேராடூன், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். டெல்லியை அடுத்த காசியாபாத் பகுதியில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா-வை அங்குள்ள காவல் துறையினரின் உதவியுடன் சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று கைது செய்தனர்.
விடிய விடிய விசாரணை:
அதனைத் தொடர்ந்து அங்குள்ள மாவட்ட நீதிமன்றமான சாரெட் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா-வை ஆஜர்படுத்தி 2 நாட்கள் டிரான்சிட் வாரண்ட் பெற்று நேற்றிரவு 11.45 மணியளவில் அவரை சென்னை அழைத்து வந்தனர். அதன் பின்னர் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர் பாபா-விடம், சி.பி.சி.ஐ.டி போலீசார் விடிய விடிய தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ஒரு பெண் காவல் ஆய்வாளர் உட்பட 5 சி.பி.சி.ஐ.டி அலுவலர்கள் இந்த விசாரணையில் ஈடுபட்டு குற்றச்சாட்டு சம்பந்தமான கேள்விகளை எழுப்பி அவரின் வாக்குமூலத்தை வீடியோ பதிவும் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொருட்டு பலத்த பாதுகாப்புடன் சி.பி.சி.ஐ.டி போலீசார் அழைத்துச் செல்கின்றனர்.
ஜாமீன் எடுக்க முயற்சி:
முன்னதாக அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மருத்துவக் காரணங்களைக் கூறி ஜாமீன் கோர சிவசங்கர் பாபா தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு புறம் சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து மீண்டும் பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசாரும் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: கிஷோர் கே சாமி மீது புகார் அளித்த நடிகை!