சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்த மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தனர். அதன்பேரில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 16ஆம் தேதி டெல்லியில் வைத்து சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர் மீது 7 போக்சோ வழக்குகளும், பள்ளியில் படித்த மாணவியின் தாயாரை மிரட்டியதாக ஒரு வழக்கும் என மொத்தம் எட்டு வழக்குகள் பதியப்பட்டன. இது தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
சிவசங்கர் பாபா தரப்பில் உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவர் மீது உள்ள அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெறப்பட்டது. மேலும் அவருக்கு தமிழ்நாட்டை விட்டு எங்கும் வெளியில் செல்லக்கூடாது. பாஸ்போர்ட்டை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். தேவைப்பட்டால் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அதனடிப்படையில் சிவசங்கர் பாபா எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக பல முக்கிய கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டு மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர் சென்றுவிட்டார். மீண்டும் வழக்கு விசாரணைக்கு தேவைப்பட்டால் சிவசங்கர் பாபாவை அழைக்கப்படுவார் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 13 இடங்களில் காயம்: விக்னேஷ் பிரேத பரிசோதனை அறிக்கையால் அதிர்ச்சி