ஒருங்கிணைந்த மரபுவழி சித்த மருத்துவர்கள் நலச்சங்கத்தின் சார்பில் இன்று சேப்பாக்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அச்சங்கத்தின் நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்டோர், தமிழ்நாட்டில் உருவான மரபுவழி சித்த மருத்துவம் இன்று உலக அளவில் பிரசித்தி பெற்றிருந்தாலும் இந்த மருத்துவத்தைச் செயல்படுத்த பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். குறிப்பாக, சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவங்களைச் செய்துவரும் பரம்பரை மருத்துவர்களுக்குப் பயிற்சி அரசுப் பதிவு வழங்கி அதன்மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும். பரம்பரை மருத்துவர்களுக்குத் தனி ஆணையம் அமைக்க வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதா விதி 32-இன் கீழ் ஆயுஷ் துறையில் சித்த மருத்துவம் உள்ளிட்ட பரம்பரை மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதோடு, தனித்துறையும் ஏற்படுத்த வேண்டும். ஆயுர்வேதத்தையும் யோகாவையும் உலகறியச் செய்தது போல் சித்த மருத்துவத்தையும் உலகறியச் செய்ய வேண்டும்.
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை ஓலைச்சுவடிகளை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அனைத்து சித்த மருத்துவ சங்கங்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றனர்.