சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் சொத்துவரி மற்றும் வணிகவரி முறையாக செலுத்த வேண்டும் என மாநகராட்சி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வீடுகள் பல ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தாமல் இருந்து வருகின்றது.
அப்படி இருக்கும் நிறுவனங்கள் அல்லது கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி சீல் வைக்கும் பணியில் சென்னை மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் வைத்திருக்கும் கடைகளும் சரிவர வாடகை செலுத்தவில்லை என்றாலும் நோட்டீஸ் அனுப்பி சீல் வைத்து வருகின்றனர்.
அதன்படி சென்னை மாநகராட்சி மண்டலம் 5-யில் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாக கடைகள், ரத்தன் பஜாரில் சுமார் 77 கடைகள், பிரேசர் பிரிட்ஜ் ரோட்டில் சுமார் 83 கடைகள் என மொத்தம் 160 கடைகள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய மாத வாடகை நிலுவைத்தொகை என சுமார் ரூபாய் 40 லட்சத்து 60 ஆயிரத்தை செலுத்தாமல் வைத்துள்ளன.
இந்த காரணத்தினால் இந்த கடைகளுக்குப் பலமுறை அறிவுறுத்தியும், நேரில் சென்று நிலுவை விவரங்கள் தெரிவித்து நிலுவைக்கான தாக்கீதுகள் வழங்கியும் இன்று(ஆக.17) வரை அந்த நிலுவைத்தொகையினை செலுத்தாத காரணத்தினால், மேற்குறிப்பிட்ட 160 கடைகள் மூடி சீல் வைக்கப்பட இருந்தன.
இந்நிலையில் 30 கடைகள் நேற்று(ஆக.16) இரவு ஆன்லைன் மூலம் வாடகை பாக்கியை செலுத்திவிட்டதன் காரணத்தினால் 130 கடைகள் மட்டும் இன்று மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.
மூடி சீல் வைத்த கடைகளுக்கு உரியவர்கள் நிலுவைத்தொகையினை வரைவு காசோலையாக உடனடியாக செலுத்தும் பட்சத்தில் உயர் அலுவலர்களின் அனுமதி பெற்று கடைகள் திறந்து விடப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில் நடிகை ஜாக்குலின் பெயர்