தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குத் தளர்வுகளின்படி, இன்று முதல் சென்னையில் ஷோ ரூம்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளதால் போதிய அளவுக்கு வியாபாரம் நடைபெறவில்லை என தி.நகர் ரங்கநாதன் தெரு வியாபாரிகள் கூறுகின்றனர்.

பத்து நபர்கள் வேலை செய்யும் கடைகளில் மூன்று நபர்கள் மட்டுமே வேலை செய்வதாகவும், 15 சதவீதத்துக்கும் குறைவான அளவில்தான் வியாபாரம் நடைபெறுவதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மின்சார ரயில், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை இயக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் இயல்பு நிலை திரும்பும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல், கோடைகாலம் என்பதால் வெளியே வர மக்கள் அஞ்சுவதால், தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தில் வியாபாரம் நடைபெறவில்லை என்றும், கடைகளை திறக்க அனுமதிக்கப்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும், ஆட்டோக்கள் இயங்கவும் இன்றிலிருந்து அனுமதி வழங்கப்பட்டாலும், பயணிகள் யாரும் வரவில்லை என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கரோனா அச்சம்: அனுமதியிருந்தும் இரு விழுக்காடு ஊழியர்களோடு இயங்கும் டைடல் பார்க்!