சென்னை மாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கம் சார்பில், குறைந்த தூரத்திற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் ஷேர் ஆட்டோ (அபே ஆட்டோ), டாடா மேஜிக், மேக்ஸி கேப் ஆகியவற்றை இயக்க அனுமதி வழங்க வேண்டும், ஓட்டுநர்களுக்கு வாரியம் மூலமாக அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாயை முழுமையாக வழங்க வேண்டும், வாகனத்தை இயக்காத ஓட்டுநர்கள் குடும்பத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
மேலும், மத்திய அரசிடம் வாகனம் புதுப்பித்தல், சாலைவரி, காப்பீடு, வங்கித் தவணை போன்றவற்றை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க நிர்வாகியும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பீம் ராவ், "சென்னையில் உள்ள 90 ஆயிரம் ஓட்டுநர்கள் சார்பாக இந்த கோரிக்கைகளை வைத்துள்ளோம். இது குறித்து முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் பிரச்னைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக குடும்பத்துடன் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்துவர் ” எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஊரடங்கிலும் தீவுப்பகுதிகளுக்கு தடையின்றி உணவு தானியங்கள் விநியோகம்!