சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நிரஞ்சனி என்பவர் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 8ஆம் தேதியன்று அகில இந்திய இந்து மகாசபா நிர்வாகி கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்தார். அதன் பேரில் ஸ்ரீகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்து மகாசபா நிர்வாகி ஸ்ரீகண்டனின் மனைவி நான்சி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் தனது கணவரிடம் வேண்டுமென்றே 20 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, அதை திருப்பி கேட்டதற்குப் பாலியல் புகார் அளித்து இருப்பதாக நிரஞ்சனி மீது புகார் தெரிவித்தார்.
மேலும் நிரஞ்சனி தவறானவர் என்று கூறி, அவர் பலருடன் இருக்கக்கூடிய புகைப்படங்களையும் அப்போது வெளியிட்டார். தனது கணவர் நிரஞ்சனி போன்று பலருக்கு உதவி செய்து இருப்பதாகக் கூறிய நான்சி, அவர் மீது வேண்டுமென்றே பழிவாங்குவதற்காக இப்படியொரு புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஸ்ரீகண்டன் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் ஸ்ரீகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்புதல் போன்ற மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிரந்தரமாக மூடப்படும் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ்