செங்கல்பட்டு அரசு சிறப்பு முகாமில் உள்ள குழந்தைகள் நலக்குழு உறுப்பினரான குளோரி ஆனி, முன்னாள் தலைவர் மணிகண்டன் மற்றும் முன்னாள் உறுப்பினர் முகமது சகாருதீன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், குழந்தைகள் நலக்குழுவில் உறுப்பினராக இருக்கும் தாமோதரன், சிறார் நீதி சட்டத்தை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களிலிருந்து மீட்கப்படும் குழந்தைகளை, குழுவின் முன் ஆஜர்படுத்தாமல் மறைப்பதாகவும், இது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பாதுகாப்பாக அமைந்துவிடுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
குழுவால் விசாரிக்கப்பட்ட சிறுமியிடம் 100 ரூபாயை காண்பித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுபடி உறுப்பினர் தாமோதரன் வற்புறுத்தி உள்ளதாகவும், ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்ட அவரால், காப்பக குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து அரசிடம் புகாரளித்த தங்களை தாமோதரன் தாக்கியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, உறுப்பினர் தாமோதரனை பதவியிலிருந்து நீக்கும்படி சமூக நலத்துறை செயலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு இயக்குநரக ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, தமிழக சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்குநரகம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: பேட்டரி டார்ச் சின்னம் வேண்டாம்: எம்ஜிஆர் மக்கள் கட்சி