சென்னை: பூந்தமல்லி அடுத்த அகரமேல் பகுதியில் வெறி நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும், அந்த வழியாக செல்பவர்களையும் அவை கடித்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பரது மகன் மோனிஷ் (7) உள்ளிட்ட சிறுவர்களை சமீபத்தில் வெறி நாய் கடித்தது. இதையடுத்து, அவர்களுக்கு ரேபீஸ் நோய் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டன.
ஆனால், சிறுவன் மோனிஷுக்கு வெறி நாய் கடித்ததில் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த நிலையிலும் அவரது பெற்றோர் சிறுவனுக்குத் தடுப்பூசி போடாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சிறுவன் உயிரிழப்பு
இந்நிலையில் ஒரு மாதத்திற்குப் பின்பு சிறுவனுக்கு திடீரென நாயைப் போன்று நாக்கில் இருந்து எச்சில் வந்ததாலும், நீரைக் கண்டால் ஓடுவது உள்ளிட்ட சுபாவங்கள் இருந்ததாலும் பயந்து போன பெற்றோர் மோனிஷை எழும்பூரிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த மோனிஷ் ரேபிஸ் நோய் தாக்கியதால் இன்று (ஆக.22) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து சிறுவனின் பெற்றோர், சிறுவன் யாருடன் எல்லாம் பழகினார் என கணக்கெடுத்து அவர்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் கோரிக்கை
சிறுவனின் எச்சில் பட்டிருந்தால், அவர்களுக்கும் ரேபீஸ் நோய்ப் பரவும் என்பதால், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகரமேல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வெறி பிடித்த நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிவதால் அதனைப் பிடித்து மருத்துவம் பார்க்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குடும்பத்தினரைக் காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரிழந்த நாய்!