எழிலகம் வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில், வட கிழக்குப் பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தயார் நிலை குறித்த தொகுப்பேடு மற்றும் வெள்ள அபாயம் குறித்து தகவல் அளிக்க அழைக்க வேண்டிய எண்கள் அடங்கிய தொலைபேசி கையேடு ஆகியவற்றை வெளியிட்ட பின், செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ” அக்டோபர் 28 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் நவம்பர் 16 வரை 180.7 மி.மீ.மழை பதிவாகியுள்ளது. இயல்பு அளவான 287.9 மி.மீ.-ஐ விட 37% இது குறைவு. சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இயல்பான அளவும், 31 மாவட்டங்களில் இயல்பை விட குறைவான அளவும் மழை பெய்துள்ளது.
கடந்த கால தரவுகளின் அடிப்படையில், 4,133 பகுதிகள் வெள்ள பாதிப்புக்குள்ளாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அதில் 321 இடங்கள் மிகவும் அதிக பாதிப்புக்கும், 797 இடங்கள் அதிக பாதிப்புக்கும், 1,096 இடங்கள் மிதமான பாதிப்புக்கும், 1,919 இடங்கள் குறைவான பாதிப்புக்கும் உள்ளாகும் பகுதிகள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதிகளில் வாழும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்க, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4,713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. பாம்பு பிடி வீரர்கள், நீச்சல் வீரர்கள் உட்பட பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றிட 43,409 (14,232 பேர் பெண்கள்) முதல் நிலை மீட்பாளர்கள் தயாராக உள்ளனர். கால்நடைகளை பாதுகாக்க கூடுதலாக 8,871 முதல் நிலை மீட்பாளர்கள் ஆயத்த நிலையில் உள்ளனர். பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண முகாம்களை நிர்வகிக்கவும் 662 பல்துறை மண்டல குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 5, 505 காவலர்கள், ஊர்காவல் படையைச் சேர்ந்த 691 பேர், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையால் பயிற்சி அளிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். தேங்கும் நீரை உடனடியாக வெளியேற்ற கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நீர் முழுக் கொள்ளளவை எட்டும் பட்சத்தில் உபரி நீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை தயார் நிலையில் உள்ளது. ஏரி முழுவதும் பொதுப்பணித்துறையின் முழுக் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் உள்ளது. வெள்ளம் தேங்கும் பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும், 36 மாவட்டங்களுக்கும் மற்றும் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் பேரிடர் காலங்களில் கண்காணிப்பு மற்றும் அறிவுரைகள் வழங்க மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077) TNSMART செயலி, சமூக வலைதளம் மற்றும் பத்திரிகை மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது “ எனக் கூறினார்.
இதையும் படிங்க: தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு