தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் கடும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட எல்லைகளில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர், தகுந்த ஆவணம் இல்லாத பணம், நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, ”பொதுமக்கள் ஐம்பதாயிரம் வரை பணம் எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் பணம் எடுத்துச் செல்ல நேரிட்டால், அதற்குரிய ரசீது மற்றும் ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அணிந்திருக்கும் நகைகள் தவிர, பிற நகைகள் இருப்பின் அதற்கான உரிய ரசீது வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படாது.
வரும் 12 முதல் 19 ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய அனுமதியில்லை. மனுத்தாக்கலின்போது இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் 68,324 வாக்குப்பதிவு மையங்களாக இருந்ததை, கரோனா காலம் என்பதால் 88,937 வாக்குப்பதிவு மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு, 50% வாக்கு மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்படவுள்ளது. தேர்தல் பணியில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 892 ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: ரூ.1.50 லட்சம் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை