சென்னை: சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று(ஜூன் 30) நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனா்.
அப்போது திருச்சியைச் சேர்ந்த சதாம் உசேன்(26), சென்னையைச் சேர்ந்த யூசி யூசுப் அலி சையத் (34) ஆகிய இரண்டு பயணிகள், சுற்றுலாப் பயணிகள் விசாவில் சாா்ஜா சென்றுவிட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தனா். இவா்கள் மீது சுங்க அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர்களை நிறுத்தி விசாரித்தனர். அதன்பின்பு அவர்களுடைய உடமைகளை சோதனையிட்டனா்.
பின்னர் சோதனையில் அவர்களுடைய சூட்கேஸ் மற்றும் பைகளில் ரகசிய அறைகள் வைத்து தங்க கட்டிகள், தங்கப் பசைகளையும் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுடைய இரண்டு பேரிடமிருந்து மொத்தம் 3 கிலோ தங்கத்தை சுங்க அலுவலர்கள் கைப்பற்றினா்.
மேலும் இவா்கள் இருவரிடமிருந்து செல்போன்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் சுங்க அலுவலர்கள் கைப்பற்றினா். தங்கம் மற்றும் மின்னணுப் பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூபாய் 1.42 கோடி. இதையடுத்து சுங்க அலுவலர்கள் இரண்டு பயணிகளையும் கைது செய்து, தங்கம் உள்ளிட்டப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இருவரும் கடத்தல் கும்பலுக்கு குருவிகளாக செயல்பட்டவா்கள் என்று தெரியவந்தது. எனவே, இவா்களை இந்த கடத்தலுக்குப் பயன்படுத்திய, கடத்தல் கும்பலைச் சோ்ந்த முக்கிய நபா்கள் யாா்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதையும் படிங்க: பிகார்: மகளை பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்!