இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு ஊராட்சி நூலகங்களில் திமுக ஆதரவு நாளேடுகளையும், இதழ்களையும் வாங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக தமிழ்நாடு அரசு வற்புறுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
'கட்சிக்கும், ஆட்சிக்கும் இடைவெளி இருக்க வேண்டும். அரசியல்மாச்சரியங்களை ஒருபோதும் ஆட்சியதிகாரத்தில் திணிக்கக்கூடாது' என முழங்கிட்ட அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு மாறாக, அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களது அரசியல் மேலாதிக்கத்தை நிறுவ முற்படுவதும், அதிகார அத்துமீறலை அரங்கேற்றுவதும் கண்டனத்திற்குரியது.
புதிதாக நிறைய நூலகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவைகள் பராமரிக்கப்பட்டுப் புதிய நூல்களும், இதழ்களும் மக்களின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட வேண்டும். அதனைச் செய்ய முன்வராது, ஒரு கட்சியின் சார்புடைய ஏடுகளுக்கு மட்டுமேயான பகுதியாக நூலகங்களை மாற்றுவது சரியல்ல.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதா?
ஊராட்சி நூலகங்களில் எல்லா இதழ்களையும், நாளேடுகளையும் வாங்க உத்தரவுப் பிறப்பித்தால் அது ஏற்புடையது; வரவேற்கத்தக்கது. அதனைவிடுத்து, திமுக ஆதரவு நாளேடுகளையும், இதழ்களையும் மட்டும் வாங்குவதற்கு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது நிர்வாகச்சீர்கேடாகும்.
தான் உயர்மட்ட அதிகாரத்திலிருப்பதால், தனது நூல்களை வாங்கவோ, அதனைச் சந்தைப்படுத்தவோ வேண்டாமென அலுவலர்களுக்கு உத்தரவுப் பிறப்பித்த தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவிப்பு வரவேற்பைப் பெற்ற நிலையில், நடைபெறும் இதுபோன்ற செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கிறது.
ஆகவே, தமிழ்நாடு ஊராட்சி நூலகங்களுக்கு திமுக ஆதரவு ஏடுகளை வாங்குவதற்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் அறிவிப்பினைத் திரும்பப் பெற்று, எவ்விதச் சார்புமில்லாது எல்லா இதழ்களையும், ஏடுகளையும் நூலகங்களுக்கு வாங்குவதற்கு உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.